முன் பிள்ளைப்பருவம் 2 வயது முதல் 6 வயது வரையான காலப்பகுதியையே குறிக்கிறது. முறைசார் பாடசாலையில் சேர்வதற்குரிய காலம் வரும் வரையுள்ள காலப்பகுதியே முன் பிள்ளைப்பருவ வயதாகக் கருதப்படுகிறது.
குழந்தைப் பருவத்தில் பெற்றுக் கொள்ளும் பின்வரும் திறமைகள் இப்பருவத்துள் நுழையும் பிள்ளைகளிடம் காணக் கிடக்கின்றன.
- நடக்க முடியும்.
- திண்ம உணவுகளை உண்ண முடியும்.
- உடல் ரீதியில் ஓரளவு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருத்தல்.
- மலசலங் கழித்தலில் ஒரு கட்டுப்பாடு இருத்தல்.
- போதுமானளவு சொற்களஞ்சியத்தைக் கட்டியெழுப்பி இருத்தல்.
- சொற்களை அநேகமாகத் திருத்தமாக உச்சரிக்கக் கூடியதாக இருத்தல்.
- சொற்களின் கருத்தை நன்கு விளங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் இருத்தல்.
- எளிய கூற்றுக்களை, கட்டளைகளை விளங்கிக் கொள்ள கூடிய ஆற்றல் இருத்தல்.
- பல சொற்களைப் பயன்படுத்தி எளிய வசனங்களை ஆக்கும் ஆற்றல் இருத்தல்.
- எளிய மட்டத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஆற்றல் இருத்தல்.
- சமுக, பௌதீக விடயங்களின் யதார்த்தம் பற்றி ஓரளவு அறிவு இருத்தல்.
- நல்ல, கெட்ட நடத்தைகள் பற்றிய மிகக் குறைந்த அறிவு காணப்படல்.
இவ்வாறான பின்னணியின் கீழ் இவ்வயதுப் பிள்ளைகளின் எதிர்கால அபிவிருத்திச் செயலொழுங்கு தொடர்ச்சியாக நடைபெறும். இப்பருவத்தில் நடைபெறும் விருத்தியானது பின்வரும் முறையில் பல அம்சங்களின் கீழ் ஒன்றிணைந்ததாக நடைபெறும்.
உடல் சார் விருத்தி
- உயரம் : சாதாரணமாக ஒரு வருடத்துக்கு 3 அங்குல விருத்தி காணப்படும். ஆறு வயதாகும் போது ஒரு பிள்ளையின் சாதாரண உயரம் 4 அடி அளவில் காணப்படும்.
- நிறை சாதாரண போஷாக்குள்ள ஒரு பிள்ளையின் நிறை ஒரு வருடத்திற்கு 3 இறாத்தல் முதல் 5 இறாத்தல் வரை அதிகரிக்கும். சாதாரணமாக ஒரு பெண்பிள்ளை 6 வயதாகும் போது சுமார் 48 இறாத்தல் நிறையும் ஓர் ஆண்பிள்ளை சுமார் 49 இறாத்தல் நிறையும் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
- உடலின் அளவு குழந்தைப் பண்புகள் இல்லாது போகும். நாடி தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும். கழுத்தின் அளவு நீளும். உதடுகள் ஓரளவு மட்டமான வடிவைக் கொண்டிருக்கும். நெஞ்சுப்பகுதி அகன்று மட்டமான வடிவைக் கொண்டிருக்கும். புயங்கள் அகன்று சதுர வடிவிற்கு மாறும். கைகளும், கால்களும் நீளும். உள்ளங்கை, உள்ளங்கால் விரிவடையும்.
- உடலின் அமைப்பு : உடலின் அமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. சிலரின் உடல் மெலிந்ததாகவும், இன்னும் சிலரது உடல் கொழுத்ததாகவும், வேறு சிலரது உடல் உறுதியானதாகவும் காணப்படும்.
- எலும்புகளும் தசைகளும் : உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள எலும்புகள் பல்வேறு மட்டங்களில் வளர்ச்சிக்குட்படுகின்றன. தசைகள் வளர்ச்சி பெற்று, உறுதியாகி, நிறை அதிகரிக்கின்றது.
- பற்கள் : முன்பிள்ளைப் பருவத்தில் முதல் 6 மாதங்களில் குழந்தைப் பருவத்துக்குரிய நான்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். முன் பிள்ளைப்பருவ இறுதிப் பகுதியில் பாற்பற்களுக்குப் பதிலாக நிலையான பற்கள் முளைக்கத் தொடங்கும். முன் பிள்ளைப்பருவம் முடிவடையும் போது பிள்ளைகளின் வாயில் முன்பகுதியில் நிலையான பற்கள் சில காணப்படுவதோடு புதிய நிலையான பற்கள் முளைக்கவேண்டிய இடைவெளிகளும் காணப்படும்.
- இப்பருவமாகும் போது குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற விசேட உணவு தயாரிக்கும் தேவை குறைந்து செல்லும்.
- உரிய நேரத்தில் தமது உணவை உட்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகப் பெறுவர்.
- குழந்தைப் பருவத்திற் போன்று இப்பருவத்தில் உடல்சார் விருத்தி வேகமாக நடைபெறுவதில்லை. அத்தோடு சில உணவுகள் தொடர்பான விருப்பு விருத்தியுற்றுக் காணப்படும்.
- நித்திரை தொடர்பான தனியாள் வேறுபாடுகள் பிள்ளைகளிடம் காணப்படும். இதில் அவர்கள் பகற் காலங்களில் எந்தளவு களைப்புறுகிறார்கள் அல்லது களைப்புறாதிருக்கிறார்கள் என்ற விடயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- சாதாரணமாக இவ்வயதில் பிள்ளைகள் சுமார் 12 மணித்தியாலங்கள் நித்திரை கொள்வர். இப்பருவத்தில் பொதுவாக நித்திரை கொள்ளும் காலம் வருடாந்தம் ஒன்றரை மணித்தியாலத்தால் குறைந்து செல்வதைக் காணலாம்.
- மலசலங் கழிப்பதில் ஒரு கட்டுப்பாடான நிலை ஏற்படும். அதேபோன்று இரவு வேளைகளில் தன்னையறியாது சிறுநீர் கழியும் தன்மை படிப்படியாகக் குறைந்து செல்லும்.
- வளர்ந்தோர் கூறுபவற்றை விளங்கிக் கொள்ளும் ஆற்றல்.
- தனக்குத் தேவையானவற்றை ஏனையோர் விளங்கும் வகையில் தொடர்பாடக்கூடிய ஆற்றல்.
- இப்பருவப் பிள்ளைகளின் பேச்சு தன் மையமாகக் காணப்படும். எனினும் இப்பருவ இறுதியில் ஏனையோர் பற்றியும் பேசத் தலைப்படுவர்.
- அநேகமாக அவர்களின் பேச்சு முறைப்பாட்டு வடிவை எடுக்கும். அதேபோல் அவர்களது பேச்சு ஏனையோர் பற்றி விமர்சிப்பதாகவும் அமையும்.
- கோபம் ஏற்பட்டவுடன் ஏனையோருக்குப் பட்டப்பெயர் கூறுவதற்கும் பிள்ளைகள் தலைப்படுவர்.
- தமக்கு உரிய விடயங்கள் பற்றித் தற்புகழ்ச்சியுடன் பேசுவர்.
- தான் பழகும், ஒன்றாக விளையாடும் அங்கத்தவர்கள் அதிகரிக்கும் போது அவர்களின் நடத்தை மிகவும் விரிவடைந்த சமுகமயத் தன்மையைக் கொண்டிருக்கும். அதனால் வினவும் வினாக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவதோடு கட்டளை இடும் நிலை அதிகரிக்கும்.
- பிள்ளைகள் பழகும் குழுவினர் சிறிதாகுமளவுக்குப் பிள்ளைகளின் மொழி விருத்திக்கு உறுதுணை கிடைக்கும். பிள்ளைகள் பேசும் அளவும் அதிகரிக்கும்.
அனைத்துப் பிள்ளைகளுக்கும் இப்பண்புகளைப் பொதுமைப்படுத்த முடியாவிட்டாலும் பிள்ளைகள் பேசும் அளவு கூடும். குறையும் விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பின்வரும் விதத்திலான காரணிகள் பல இருக்கலாம்.
- விவேக மட்டம் கூடிய பிள்ளைகள் விரைவாகப் பேசப்பழகுவர்.
- பெற்றோர்களின் அதிகாரம் அதிகமுள்ள வீடுகளில் பிள்ளைகள் குறைவாகப் பேசத் தலைப்படுவர்.
- முதலில் பிறக்கும் பிள்ளைகளுடன் பேசுவதற்கும் அதிக நேரத்தைப் பயன்படுத்துவதற்குப் பெற்றோர்களுக்குச் சந்தர்ப்பம் உண்டு.
- குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை குறையும் போது பிள்ளைகளின் பேச்சில் கவனஞ் செலுத்த, பெற்றோர்களுக்குச் சந்தர்ப்பம் அதிகரிக்கும்.
- குடும்பத்தின் சமுக, பொருளாதாரப் பின்னணி உயரும் அளவுக்குப் பிள்ளைகளின் மொழி விருத்திக்குத் தேவையான பின்னணி உருவாகும்.
மனவெழுச்சி சார் விருத்தி
இப்பருவத்திற்குரிய பிள்ளைகள் அவசரமாகக் குழப்பமடைவதோடு அவர்களை அமைதிப்படுத்துவது அவ்வளவு இலகுவானதல்ல. இப்பருவத்தில் காணப்படும் மனவெழுச்சிசார் அமைதியின்மை தொடர்பான பலம்மிக்க பண்புகளான கோபமடைதல், அதிகம் கண்ணீர் வடித்தல். பொறாமைக்குணத்தை வெளிக்காட்டல் என்பன காணப்படும். நீண்ட நேரம் விளையாடுவதால் ஏற்படும் அதிக களைப்பு. நித்திரை கொள்ளல் பற்றிய பிரச்சினைகள், போதுமானளவு உணவுஉண்ணாமை போன்றவற்றைக் காரணமாகக் கொண்டு இப்பருவத்தில் மனவெழுச்சிப் பண்புகள் வெளியாகும். வளர்ந்தோர் இவர்கள் விடயத்தில் விதிக்கின்ற நடத்தை வரையறைகளுக்கு எதிராக இயங்கி, தமக்கு அவர்கள் நினைப்பதைவிட யாதேனுமொன்றைச் செய்ய முடியும் என்ற எண்ணத்தைக் காரணமாக வைத்து, அவர்களுள் மனவெழுச்சிப் பண்புகள் வெளியாகும். இவ்வயதுப் பிள்ளைகளுள் ஏற்படும் மனவெழுச்சிப் பண்புகள் சில பின்வருமாறு அமையும்.
- கோபம்: பிள்ளைகள் கோபப்படுவதற்கு, பிரதானமாகத் தமது விளையாட்டுப் பொருட்களின் பாவனை பற்றிய பிரச்சினைகள், தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமை, வேறொரு பிள்ளை தாக்குதல் போன்ற விடயங்கள் காரணமாக அமையலாம். பிள்ளைகள் தமது கோபத்தை அழுதல், சத்தமிடல், ஒன்றைத் தாக்குதல், காலால் தாக்குதல். மேலே துள்ளுதல் போன்ற செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்துவர்.
- பயம்: வெறுப்பான விடயங்கள் பற்றிய ஞாபகம், சுய நடத்தை மற்றும் ஏனையோரைப் பின்பற்றல் போன்ற காரணங்களால் பிள்ளைகளிடையே பய உணர்வு ஏற்பட முடியும். அதேபோன்று தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளைச் செவிமடுத்தல், பார்வையிடல் ஊடாகவும் பயம் ஏற்படும் நிலை வெளிப்பட முடியும்.
- பொறாமை: பெற்றோரின் கவனம் குடும்பத்தில் வேறொரு அங்கத்தவரில் (புதிதாகப்பிறந்த பிள்ளையில்) செலுத்தப்படுவது தெரியவரின், அதனைக் காரணமாகக் கொண்டு பிள்ளைகளிடையே பொறாமை உணர்வு ஏற்படும். சிலவேளைகளில் தமது பொறாமை உணர்வைப் பகிரங்கமாக வெளிக்காட்ட இடமுண்டு. அத்துடன் இரவில் கட்டிலில் சிறிநீர் கழித்தல், நோயுற்றுள்ளதாக உணர்த்துதல், கட்டுக்கடங்காது போதல் போன்ற நடத்தைகள் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்துவர்.
- ஆதங்கம்: புதிதாகக் காணும் விடயங்கள் பற்றிப் பிள்ளைகளிடம் ஆதங்கம் ஏற்படுவது இயற்கையாகும். அவ்வாறான நிலைமையின் போது புதிதாகக் கண்டவற்றைத் தடவிப்பார்த்து, யாதேனும் ஓர் அறிவைப் பெற்றுக் கொள்வதே அவர்களின் நேரடித் துலங்கல் ஆகும். எனினும் வளர்ந்தோரின் எதிர்ப்பு வெளிப்படுவதால் அவர்கள் படிப்படியாக அவை பற்றிப் பல்வேறு வினாக்கள் வினவத் தொடங்குவர்.
- ஆசை: இப்பருவப் பிள்ளைகள் அநேகமாக ஏனையோரின் பொருட்கள் தொடர்பாக ஆசை வைப்பர். அவ்வாறு ஆசை ஏற்பட்டவுடன் அவர்கள் வளர்ந்தோரிடம் முறைப்படுவர். அல்லது அப்பொருளைத் தமக்கும் பெற்றுத் தருமாறு வேண்டுவர்.
- மகிழ்ச்சி: அசாதாரண நிகழ்வு ஏற்படும்போது. ஒரு புதுமையான சத்தம் கேட்கும் போது, யாதேனும் குழப்பம் ஏற்படும் போது பிள்ளைகள் மகிழ்ச்சி அடைவர். தமது மகிழ்ச்சியை, சிரிப்பு. கைதட்டல், மேலே துள்ளுதல், கட்டியணைத்தல் போன்ற நடத்தைகள் மூலம் வெளிப்படுத்துவர்.
- துக்கம்: யாதேனுமொன்று தமக்குக் கிடைக்காதபோது பிள்ளைகள் துக்கமடைவர். அது ஒரு பொருளாக. ஒரு விளையாட்டுப் பொருளாக, தான் விரும்பும் ஒரு நபராக இருக்கலாம். தமது துக்கத்தை அநேகமாக அவர்கள் அழுவதன் மூலமாக வெளிப்படுத்துவர். அல்லது தமது காரியங்களில் உற்சாகம் காட்டாது. உணவு உட்கொள்ளாது இருத்தல் மூலம் வெளிப்படுத்துவர்.
- அன்பு: தமக்குச் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுத்தரும் பொருட்களில், விளையாட்டுப் பொருட்களில், நபர்களில் அன்பு காட்டத் தொடங்குவர். தமது அன்பை. கட்டித்தழுவுவதன் மூலம், தட்டுவதன் மூலம், முத்தமிடுவதன் மூலம் அவர்கள் வெளிப்படுத்துவர். காலஞ் செல்லத் தமது அன்பைச் சொற்களின் மூலம் வெளிப்படுத்த அவர்கள் கற்றுக்கொள்வர்.
மனவெழுச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்
- விவேக மட்டம் கூடிக் குறைவதற்கேற்ப மனவெழுச்சியும் கூடிக் குறையும்.
- ஆண், பெண் பால்வேறுபாட்டுக்கேற்பவும் மனவெழுச்சி மாறுபடும்.
- குடும்பத்தின் அளவும் மனவெழுச்சியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாகும். பொறாமை எனும் மனவெழுச்சிப் பண்பு சிறிய குடும்பங்களிலும் ஆசை போன்ற மனவெழுச்சிப் பண்பு அதிகமாகப் பெரிய சிறிய குடும்பங்களிலும் காணக்கிடக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் உண்டு.
- குடும்பத்தில் எத்தனையாவது பிள்ளை என்ற விடயமும் மனவெழுச்சி மாற்றங்களை ஏற்படுத்தும்.
- பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக ஆக்குவதற்கு வளர்ந்தோர் பின்பற்றும் போதனை முறைகளின் கடின நிலை, மென்மை நிலை என்பனவும் பிள்ளைகளின் மனவெழுச்சித் தன்மையைத் தீர்மானிக்கும்.
சமுக விருத்தி
இப்பருவத்தில் சிறிது சிறிதாக அதிகரிக்கும் நண்பர்களின் தொகைக்கிணங்க பிள்ளைகளின் சமுகமயமாதல் முறையும் படிப்படியாக விருத்தியுறும், உரிய வயதுப் பிள்ளைகளிடையே சமுகமயமாதல் தொடர்பாகக் காணப்படும் சில சமுகக் கோலங்கள் பின்வருமாறு காணப்படும்.
- பாவனை செய்தல்: இவ்வயதுப் பிள்ளைகள் தமது குழுவிலுள்ள. தாம் விரும்புகின்ற ஒருவரின் மனப்பாங்குகளை,நடத்தைகளைப் அநேகமாகக் காணக்கூடியதாக உள்ளது. போல பாவனை செய்வதை
- போட்டி நிலை: 4 வயதாகும் போது ஏனையோரை விஞ்சிப் போகும் ஆசையை அதிகமான பிள்ளைகள் வெளிக்காட்டுவர். இப்பண்புகள் முதலில் வீட்டிலே வெளிப்படுவதோடு பின்னர் அவை படிப்படியாக ஏனையோருடன் விளையாடும் போது வெளிப்படும்.
- ஒத்துழைப்பு: 3 வயது இறுதியில் சேர்ந்து விளையாடுகின்ற, குழு செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற தேவை அதிகரிப்பதைக் காணலாம். ஏனைய பிள்ளைகளுடன் விளையாடும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் அளவுக்கு அவ்வாறான விளையாட்டுக்களில், செயற்பாடுகளில் ஈடுபடும் அளவும் அதிகரிக்கும்
- அனுதாபம் காட்டல்: இப்பண்பு 3 வயதுக்கு முன் அரிதாகவே ஏற்படும். விளையாட்டு தொடர்பான தொடர்புகளைப் பிள்ளைகள் கட்டியெழுப்பும் அளவுக்கு அவர்களிடையே அனுதாபம் காட்டும் பண்பு அதிகரிக்கும்.
- அக்கறை: அனுதாபம் காட்டுவது போன்றே அக்கறை செலுத்துவதற்கும் ஏனையோரின் உணர்வுகள் மனவெழுச்சிகள் பற்றிய தெளிவு அவர்களுக்கு இருக்க வேண்டும்.
- சமுக அனுமதி: முன்பிள்ளைப்பருவம் முடிவடையும் போதே வளர்ந்தோரின் அனுமதியை விட தமது சமவயதுக் குழுவினரின் அனுமதி பிள்ளைகளுக்கு முக்கியத்துவமாகின்றது. சமவயதுக் குழுவினரின் அனுமதியைப் பெறுவதற்காகப் பொருத்தமற்ற நடத்தைகளும், ஏனையோருக்குத் தொல்லை ஏற்படும் நடத்தைகளும் உறுதுணையாகும் என இவ்வயதுப் பிள்ளைகள் சிந்திப்பார்கள்.
- கூட்டாக அனுபவித்தல்: சமுக அனுமதியைப் பெறும் பொருட்டு தன்னிடமுள்ளவற்றை விசேடமாக விளையாட்டுப் பொருட்களைக் கூட்டாக அனுபவித்தல் (தியாகத் தன்மை) உகந்த ஓர் உத்தி என இவ்வயதுப் பிள்ளைகள் விளங்கிக் கொள்வர்.
- தொடர்புகள்: சின்ன வயதில் மற்றவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பை வைத்துக் கொள்ளும் பிள்ளைகள் படிப்படியாக இவ்வயதை அடையும் பொழுது வெளி நபர்களுடன் உதாரணமாக முன்பள்ளி ஆசிரியருடன் அல்லது வேறு நபர்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்வர்.
மேற்கூறிய சமுகமயப் பண்புகளுக்கு எதிராகப் பின்வரும் விதத்திலான சமுகமயமல்லாத பண்புகளையும் சில வேளைகளில் இவ்வயதுப் பிள்ளைகள் வெளிப்படுத்துவர்.
- பின்னடைவு: வளர்ந்தோரின் அதிகார பலத்துக்கு எதிராக இயங்கும் நிலை இக்காலத்துள் காணலாம்.
- ஆக்கிரமிப்பு நிலை: ஆக்கிரமிப்புப் பண்பாக ஆரம்பத்தில் செய்யும் உடல்சார் தாக்குதல் பின்னர் படிப்படியாக வாய்மொழித் தாக்குதலாக மாற்றமடையும். வாய்மொழித் தாக்குதல்கள், பட்டப்பெயர் கூறுதல், ஏசுதல் போன்ற வடிவங்களை எடுக்கும்.
- விஞ்சிச் செல்லும் நடத்தை: சிலவேளைகளில் பிள்ளைகள் ஏனையோரை விஞ்சிச் சென்று மேல்வர முயற்சிப்பர். ஏனையோரை விட தாம் மேலானவர் என்ற உணர்வுடன் செயற்படும் பிள்ளைகள் உள்ளனர்.
- சுயநலத் தன்மை: அநேகமாக பிள்ளைகளின் சமுகத் தொடர்புகள் வீட்டோடு வரையறுக்கப்படுவதால் அவர்கள் பெரும்பாலும் தன் மையமாக சுயநலவாதிகளாகி விடுகின்றனர். சமுகத் தொடர்புகள் விரிவடையும் பொழுது இந்நிலை மாறி தியாகத் தன்மை விருத்தியாகும்.
- தன் மைய நிலை: இப்பண்பும் பிள்ளை வளரும்போது படிப்படியாக நீங்கிச் செல்லும். அவர்கள் ஏனையோரின் வரவேற்பைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கும் அளவுக்குத் தன் மைய நிலை நீங்கிவிடும்.
- நாசகார நிலை: பிள்ளைகளிடையே கோபம் கூடும் அளவுக்கு அவர்களது கைகளில் கிடைக்கும் அநேகமானவற்றை அழித்துவிடுவதற்குத் தூண்டப்படுவர். அவை தமதாயினும் வேறொருவருடையதாயினும் வித்தியாசமின்றி உடைத்து நொறுக்குவதற்கு அவர்கள் தூண்டப்படுவர்.
Post a Comment