அன்றாட வாழ்வில் தனி மனிதன், மாணவர்கள், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள் எல்லோரும் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் ஏராளம் ஆப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில் உதவும் வழியாக ஆலோசனையும் வழிகாட்டலும் காணப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபட முடியாமல் சமூகம் பயங்கரமான பிரச்சினைகளில் சிக்குண்டு காணப்படுகின்றது. இப்பிரச்சினைகளைத் தணித்துக் கொள்வதற்கு ஆலோசனையும் வழிகாட்டலின் பங்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்றது. எனவே இப்பகுதியின் முக்கிய நோக்கம் உதவி வளங்கலாகும். அதாவது பரிகாரம் காணல், விருத்தி பெறச் செய்தல், வழிகாட்டல், திசைப்படுத்தல் போன்ற உதவிகளையே இது குறிக்கும். ஆலோசனையும், வழிகாட்டலும் என்பதற்கு பின்வரும் வரைவிலக்கணங்களைக் கூறலாம்.
ஆலோசனை:
ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஆலோசகரைச் சந்தித்து நுட்பமான முறையில் கலந்துரையாடி அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏற்ற அணுகு முறைகளை பெற்றுக் கொள்ளல் ஆலோசனை எனப்படும்.
ஆலோசனையின் நோக்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல், தனியாள் விருந்தி, பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்த்தல் போன்றவையாகும். சில உளவியல் அறிஞர்களின் ஆலோசனை பற்றிய வரைவிலக்கணங்கள் வருமாறு.
'ஒருவருக்கு அவரைப் பற்றிய சுயவிளக்கத்தை ஏற்படுத்தி, அதன் அடிப்படையில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவரே தீர்த்துக்கொள்ளுமாறு வளங்கப்படும் உதவி' (Carl R.Rogers )
ஆலோசனை என்பது, ஆலோசகருடன் ஒரு தனியாள் நேரிற்கலந்துரையாடி. பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும்.(Bordin)
வழிகாட்டல்
வழிகாட்டல் எனப்படுவது வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும், சுயதிறன்களை விருத்தி செய்யவும், பொருத்தமான தெரிவுகள் செய்யவும், தீர்மானங்களை மேற்கொள்ளவும் உளவியலின் அடிப்படையில் பயிற்சி பெற்றவர்களால் வளங்கப்படும் உதவியாகும்.
பின்வரும் விடயங்களை கருத்தில் கொண்டு வழிகாட்டல் மேற்கொள்ளப்பட வேண்டும் என உளவியல் அறிஞர் R.H. Mathewson கூறியுள்ளார்.
- தன்னைத்தானே உணர்ந்து கொள்ளுமாறு சுயவிளக்கத்தை ஏற்படுத்துதல்.
- சுயதிறன்களை வெளிக்குணர்ந்து அவற்றை முழுமையாக விருத்தி செய்தல்,
- யதார்த்த சூழ் நிலைமைகளுக்கேற்ப இயைபாக்கம் காணல்
- நிகழ்கால, எதிர்கால நிலைமைகளுக்கேற்ப தன்னை இசைவுபடுத்திக் கொள்ளல்.
சில உளவியலாளர்களின் வழிகாட்டல் பற்றிய வரைவிலக்கணங்கள்
- வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வதற்கு உதவி தேவைப்படும் ஒருவருக்கு தகைமையுள்ள ஒருவரினால் அளிக்கப்படும் உதவி வழிகாட்டலாகும். (Crow & Crow)
- எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு அளிக்கப்படும் உதவி வழிகாட்டலாகும். (S.Morrison)
ஆலோசனை தொழில்த்துறை
மனிதனின் முழு நலனையும் இலக்காக கொண்டே ஆலோசனை தொழில் துறை செயற்படுகின்றது. கல்விசார் நடவடிக்கைகளானாலும், உளப்பரிகார நடவடிக்கைகளானாலும் அங்கு ஆலோசனைத் துறை காணப்படுகின்றது. இவர்கள் எங்கு செயல்பட்டாலும் உளநலம் பேண உதவி வளங்குவதே நோக்காக கொண்டிருத்தல் அசல்களின் சிறப்பியல்பாகும். ஆலோசகர் தன் தொழிலை திறம்பட ஆற்றுவதற்கு பின்வருவன காணப்படல் வேண்டும்.
- தொழில் தகைமை
- தொழில் திறன்
- ஆளுமை
- ஆலோசனைத் தொழிலுக்குரிய உரிமம்
ஆலோசகரின் தொழில் தகைமை
இச்சேவையில் ஈடுபடுவோர் அத்தொழிலுக்கு என அங்கீகரிக்கப்பட்ட தொழிற்தகையையைப் பெற்றிருக்க வேண்டும். உளவியல் துறையில் தகைமை பெற்றவர்களே ஆலோசனைத் தொழிலில் ஈடுபடுவர். அத்துடன் சமூகவியல், கல்வியியல், உடற்கூற்றியல் போன்ற துறைகளில் அறிவைப் பெற்றிருப்பதும் பயன் தரும். APA - American Psychological Association வழிகாட்டல் ஆலோசனையை ஒரு தனிப்பட்ட அறிவியல் துறையாக அறிவித்துள்ளது. இத்தொழிலில் ஈடுபடுவோர் ஆலோசக உளவியலாளர்கள் (Counseling Psychologists) என அழைக்கப்படுவர். நாளுக்கு நாள் புதிய விடயங்கள் வெளிவருவதனால் இத்துறையில் உள்ளோர் தமது அறிவை புதுப்பித்துக்கொள்ளுதல் வேண்டும்.
ஆலோசனை தொழிற்திறன்
ஆலோசகர் தொழிற் திறனை மாத்திரம் பெற்றிருத்தல் போதுமானதன்று ஆலோசனை நாடிக்கு நல்லெண்ணத்துடன் ஆலோசகர் உதவி வளங்குவதுடன் விசேட திறனும், ஆளுமையையும் கொண்டிருத்தல் வேண்டும். ஆலோசகர் தனது நடவடிக்கைகளை பின்வருமாறு அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
- சிறந்த ஆலோசனை அணுகுமுறையை தெரிவு செய்தல் வேண்டும்.
- உளவியல் பரிகார வெளி -ஆலோசனை நிறைவு பெறும் வரை பிரச்சினையை பகுத்தாராய்தல்,விளக்குதல், பரிகாரம் காணல் போன்றவற்றைப் பேண வேண்டும். ஆலோசனை நாடிகள் தமது பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏற்ற உள்ளார்ந்த நிலையை பெற்றிருப்பார். அதை ஊக்குவிக்க வேண்டும்.
- புரிந்துணர்வை ஏற்படுத்தல் ஆலோசகர், ஆலோசனை நாடி இருவரும் சுமூகமான நிபந்தனையற்ற புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும்
- ஓட்டுணர்வு இது ஆலோசர் ஆலோசனை நாடியின் இடத்தில் தன்னை வைத்து பார்ப்பதாகும். இதன் மூலம் ஆலோசனை நாடியின் பிரச்சினையில் தன்னை இணைக்கலாம்.
- ஏற்றுக் கொள்ளல், பிரச்சினையுடன் வருபவரை ஏற்று அவரது கசப்பான அனுபவங்கள், துன்பங்களை முழுமையாக வெளிப்படுத்தும் மனோநிலையை அவரில் ஏற்படுத்தலாகும்.
- வரம்புகள் மீறப்படாமை தவிர்க்கப்படல் வேண்டும். ஆலோசனையின் பொது அளவுக்கு மீறிய தொடர்புகள்
- இரகசியம் பேணல் ஆலோசனை நாடி தொடர்பான சகல தரவுகளும் அந்தரங்கமாக பேணப்படுதல் வேண்டும்.
- ஆலேசனை நாடியின் ஒத்துழைப்பு ஆலோசனை நாடிக்கு இதனால் ஏற்படும் நன்மைகளை விளக்கி அவரின் ஒத்துழைப்பை பூரணமாக பெறல் வேண்டும்.
ஆளுமை
இத்தொழிலுக்கு உளச்சார்பையும் ஆளுமைப் பண்புகளையும் பெற்றிருப்பது அவசியமாகின்றது. ஆய்வுகளின் அடிப்படையில் பின்வரும் ஆளுமைப்பண்புகள் இத்தொழிலுக்கு இன்றியமையாததாக உள்ளது.
- ஆலோசனை வளங்குவதற்குரிய அனைத்து கோட்பாடுகளையும், அறிந்து தொழிற் தேர்ச்சி பெற்றிருத்தல். தோடர்ந்து கற்பதில் ஆர்வம் காட்டல்.
- ஆலோசனை நாடி தீர்மானங்களை எடுக்கும் படி செய்தல். ஆலோசனை நாடிக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தல் வேண்டும்.
- ஆலோசனை வளங்கும் போது உடல், உளச் சோர்வு ஏற்படாமல் பாதுகாத்தல்
- ஆலோசனை நாடியின் தேவைக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையை கைக்கொள்ளல்.
Post a Comment