ஆரம்ப கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையினதும் முதன்மையான மற்றும் அடிப்படை உரிமையாகும். எல்லாக் குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியின் அணுகலை உறுதி செய்வது, அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல பெற்றோரினதும் கடமையும் ஆகும். குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சுயவளர்ச்சியுடன் வாய்ப்புகளின் வழிகளைத் திறந்து தலைமுறைக்கு இடையிலான வறுமையைக் குறைத்து மாணவர்களின் உயர்கல்வியை உறுதிப்படுத்துவதில் ஆரம்ப கல்வியின் பங்கு அளப்பரியதாக அமைகின்றது. ஆரம்ப பிள்ளைப் பருவத்தினருக்கு ஏற்றவாறு, பிள்ளையின் 03-05 வரையான காலப்பகுதியில் அனுபவக் கல்வியை வழங்கும் பணியை முன்பள்ளிக்கல்வி வழங்குகின்றது.
முன்பள்ளிப் பருவத்திலிருந்து புதிய சூழலுடன் போட்டியிடுவதற்கு ஆரம்பக்கல்வி அடித்தளமாய் அமைகின்றது. மாணவரின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான முதன்மைத் தேவையாகவும், கல்வி கற்ற இளம் சமூதாயத்தினரை வெளிக்கொணரும் முதல் முயற்சியாகவும் இது அமைகின்றது. இலங்கையில் ஆரம்பக்கல்வி நிலை தரம் 01 தொடக்கம் தரம் 05 வகுப்புக்களைக் கொண்டதாக அமைகின்றது. 05-11 வயது வரையிலான பருவத்தினர் இக்கல்வியைக் கற்கின்றனர். ஐந்து ஆண்டுகளைக் கொண்ட ஆரம்பக் கல்விப்புலம் கலைத்திட்டவிருத்தியினதும், ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளினதும் வசதி கருதி முதன்மை நிலைஒன்று(தரங்கள் 01ம், 02ம்), முதன்மை நிலை இரண்டு(தரங்கள் 03ம் 04ம்), முதன்மை நிலை மூன்று(தரம் 05) என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
WhatsApp Group : Click Here
திட்டமிடப்பட்ட விளையாட்டுக்கள், செயற்பாடுகள், எழுத்துவேலைகள் என்ற மூன்று பிரதான பகுதிகளினூடாக கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. முதன்மை நிலை ஒன்றில் திட்டமிடப்பட்ட விளையாட்டுக்களும், செயற்பாடுகளும் அதிக அளவிலும், எழுத்து வேலைகள் குறைந்த அளவில் இருத்தலிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. மூன்று பிரதான பகுதிகளும், முதன்மை நிலை இரண்டிலும், முதன்மை நிலை மூன்றில் குறைந்த அளவிலான, திட்டமிடப்பட்ட விளையாட்டுக்களுடனும் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் (பொதுக் கல்விச் சீர்திருத்தம் 1997). பேச்சு, திடகாத்திரமான வாழ்வு, தொழிநுட்பத்தைச் சார்ந்த தொழிற் பயிற்சி, வரலாற்றோடு இணைந்த அறிவைப் பெறல், சமயத்தில் ஈடுபாடு கொள்ளலும் நற்பண்புகளைக்கடைப்பிடித்தலும், சுற்றாடல் பற்றிய விளக்கம், பிள்ளையின் ஈடுபாடுகளை வளர்த்தல், தேசிய ஒருமைப்பாடு, விழுமிய வளர்ச்சி போன்றவற்றை பிள்ளைகளிடத்தே கொண்டு செல்வதை நோக்காக் கொண்டே ஆரம்பக்கல்வி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கல்வியைப் பொறுத்தவரை ஒரு பிள்ளையின் அடைவை இன்னொரு பிள்ளையின் அடைவோடு ஒப்பிட்டு தீர்மானம் எடுக்கும் முறைமையை விடுத்து, குறித்தவொரு நோக்குடனும் நியதியுடனும் மேற்கொள்வதற்கு நியதிசார்ந்த அடிப்படை கணிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப வகுப்பு மாணவர்கள் கற்றல் தொடர்பான சில பிரச்சினைகளை எதிர்கொள்ளக் காரணம் முன்னைய வகுப்பில் கட்டாயமாகக் கற்க வேண்டிய சிலவற்றைக் கற்காது அடுத்த பண்புக்கு வருவதாகும் இவ்வாறான பிள்ளைகள் கற்றல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்வதுடன், சிலரது கல்வி தோல்வியில் முடிவடைவதற்கும், இடைவிலகலிற்கும் வழிவகுக்கும். இதனைத் தடுப்பதற்காகவே ஒவ்வொரு முதன்மைப் பருவத்திலும் கட்டாயமாக கற்க வேண்டிய தேர்ச்சிகளை இனங்கண்டு, அதனை ஒவ்வொரு மாணவரிடத்திலும் வளர்த்தெடுத்து அவர்களின் ஆரம்பக்கல்வியை செவ்வனே நிறைவேற்றும் நோக்குடன், ஆரம்பக்கல்வி சீர்திருத்த மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்2001ல் அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்பாடல், ஆளுமைவிருத்தி, சூழல், வேலை உலகிற்கு தயார் செய்தல், சமயமும் ஒழுகலாறுகளும், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துதல் விளையாட்டுக்கள், கற்றலுக்காகக் கற்றல் போன்ற 07 அடிப்படைத் தேர்ச்சிகளும் ஆரம்ப கல்வியின் 03 முதன்மை நிலைகளுக்கும் ஏற்ப மொழி, கணிதம், சமயம், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் போன்ற பாடவிதானங்களின் ஊடாகவும் ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளினூடாகவும் கட்டியெழுப்பப்படுகின்றது.
யாவருக்கும் கல்வியை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு அதற்குத் தரநிர்ணயம் உள்ள ஒவ்வொரு முதன்மை நிலை இறுதியிலும் மாணவர்கள் கட்டாயமாக பாண்டித்தியம் அடையவேண்டிய அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை அடையப்பட்டுள்ளனவா ? என தொடர் கணிப்பீடு, இறுதிக் கணிப்பீடு என்பவற்றின் மூலம் ஆசிரியரால் உறுதிப்படுத்தப்படும்.குறித்த தேர்ச்சியில் பாண்டித்தியம் அடையப்படவில்லை எனின் அதற்கான காரணம் அறியப்பட்டு பரிகாரக் கற்பித்தல் ஆனது ஆசிரியரால் மேற்கொள்ளப்பட்டு, குறித்த தேர்ச்சியை அடைவதற்கு மாணவனுக்கு வழிகாட்டப்படுதல் வேண்டும். மாணவர்களின் ஆரம்பக்கல்வி விருத்தியில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது. இவர்கள் உடலாலும், உள்ளத்தாலும் சிறார்கள் என்பதால், தமது பெற்றோரின் அரவணைப்பை தனது, ஆரம்பக்கல்வி ஆசிரியரிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள். இது ஆசிரியரினால் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும். ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் தொடர்பான ஒழுக்க விழுமிய முறைமை மற்றும் பொதுச் சட்டம் எனும் தலைப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட 2013/37ம் இல சுற்றறிக் கையில் ஆசிரியர் பெற்றோருக்குப் பதிலாகவும், அறிவு திறன்மனப்பாங்கு விருத்தியாளராகவும், ஆக்கத் திறன் மிக்கவராகவும், வழிகாட்டுனர் மற்றும் ஆலோசகராகவும், மதிப்பீட்டாளராகவும், முகாமைத்துவத்தின் பொறுப்பாளராகவும்,சமூக மற்றும் தேசத்தின் முன்னோடியாகவும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பக்கல்வி பிள்ளைகளின் ஆளுமை விருத்தி என்பது பன்முக நோக்கம் கொண்டதால், அவை அனைத்தையும் நன்கு புரிந்து கொண்டவராகவும், தேர்ச்சி உள்ளவராகவும் ஆரம்பக்கல்வி ஆசிரியர் இருப்பதுடன் வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் சூழலில் பொருத்தமான வகிபாகங்களை(கடத்தல், கொடுக்கல் வாங்கல், நிலைமாற்று வகிபாகங்கள்) ஏற்று மாணவர்களின் ஆளுமை விருத்தியை உறுதி செய்பவராக மாறும் பொழுதே ஆரம்பக்கல்வி பிள்ளைகளின் ஆளுமையை வெளிக்கொணர முடியும். பெற்றோர்கள் பிள்ளைகளின் இயற்கையான செயற்பாடுகளுக்கு இடமளித்து இயல்பாகவே அவர்கள் வளர்வதற்கு இடமளிக்க வேண்டும். அவர்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். கல்வியியலாளரான மரியா மொண்டிசோரியின் கருத்துப்படி 'பிள்ளைகளுக்கு சூழலுடன் பொருந்தி வாழக் கூடிய தனி ஆற்றல்களை வளர்க்கும் விளையாட்டு மூலமான தொடர் செயற்பாட்டிற்கு கல்வி அவசியம்' எனவும், இயற்கைவாதியான ஜோன்ரூசோ பிள்ளையை இயற்கையுடன் சங்கமிக்கவிட்டு அதனூடாகக்கற்பிக்க முயல வேண்டும்' எனவும், மகாத்மா காந்தி அவர்கள் 'எல்லாக் கல்விக்கும் முதலுணர்வாகவும், உயர்ந்த படிகளை அடைந்து குழந்தைகளைப் பிற்காலப் பெரியார்களாகுவதும் ஆரம்பக்கல்வியை வைத்தே' எனவும் குறிப்பிடுகின்றனர். எனவே இவ்வாறான கருத்துக்களின் அடிப்படையில் எமது ஆரம்பக் கல்வி கட்டமைக்கப்பட வேண்டியது தேவையான ஒன்றாகும்.
இலங்கையைப் பொறுத்த வரையில் நாடளாவிய ரீதியில், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும், எக்காரணத்தைக் கொண்டும் ஆரம்பக் கல்வி ஆனது தடைப்பட்டுவிடக் கூடாது என்றும், யாவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள், 1945ல் இலவசக் கல்வி, 1956ல் சுயமொழிப் போதனை 1980ல் இலவச பாடநூல், 1993ல் இலவச சீருடை, 1998ல் கட்டாயக் கல்விச் சட்டம், 1998 பாடசாலை மட்டக் கணிப்பீடு, 2005ல் ஆரம்ப பிரிவு மாணவருக்கான சத்துணவுத் திட்டம், 2007ல் தேர்ச்சி மட்ட கலைத்திட்டம், 2016 2020ல் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டம், புலமைப் பரிசில் திட்டம் போன்றனவற்றைக் குறிப்பிடலாம். மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக பெருந்தொகை பணச்செலவில் ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இன்றைய நிலையில் ஆரம்பக் கல்வி ஆனது பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. 03 வயதில் முன்பாடசாலைக்குச் செல்லும் குழந்தை 04, 05, வயதிலும் அதே பாடத்திட்டத்தைக் கற்கின்றது, இதனால் ஒரு சலிப்புத் தன்மையுடனேயே முறைசார் பாடசாலைக்கு குழந்தை நுழைகின்றது. இது அக்குழந்தையின் வினையாற்றல்களைப் பாதிப்பதுடன், தரம்01 ஆசிரியருக்கும் பல்வேறு சிக்கலை தோற்றுவிக்கின்றது. மேலும் நடைமுறையில் உள்ள ஆரம்ப பாடசாலைகளுக்கிடையிலான போட்டித் தன்மையினாலும், தமது தரம் பேணப்படுதல் வேண்டும் என்ற நோக்கத்தினாலும் பிள்ளையின் உடல், உள வயது மட்டத்தை தாண்டிய ஆரம்ப கல்வி வழங்கப்படுவதையும், இவ்வாறான கல்வித் திணிப்பை பெற்றோர்களும் வரவேற்பதையும் அவதானிக்க முடிகின்றது. தரம் 05 புலமைப் பரிசிலானது பொருள் வசதி குறைந்த வறுமை நிலையில் காணப்படும் குடும்பங்களின் ஆற்றலுடைய மாணவர்கட்கு உதவிச்சம்பளம் வழங்குதல், மதிப்பு மிக்க பாடசாலைகளில் இடைநிலைக் கல்விக்கு மாணவர்களைத் தெரிதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே நடாத்தப்படுகின்றது. ஆனால் இது தற்போது பெற்றோர்களின் கௌரவப் பரீட்சையாக மாறிவருவதையும், இதற்காக பிள்ளைகளின் மீது அளவுகடந்த அழுத்தங்களை பிரயோகிப்பதையும் அவதானிக்கமுடிகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகள் பிள்ளையின் இயல்பான நடத்தை ஒடுக்கப்பட்டு, ஆரம்பக்கல்வி பருவமே அர்த்தமற்றதாக்கி விடுகின்றது. ஆரம்பக்கல்வி ஆசிரியருக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்கும் இடையே காணப்படும் சில புரிந்துணர்வின்மைகள், ஒரு வகுப்பறைக்கான மாணவர்களின் தொகை அதிகம் இதனால் மெல்லக்கற்கும் பிள்ளைகளை அவதானிக்க முடியாமை, சமனான கற்றல் வளங்களின் பகிர்வின்மை, ஆரம்பக்கல்வி ஆசிரியர் பற்றாக்குறைவு, பெற்றோர்களின் அக்கறையின்மை, சமூக ஒத்துழைப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஆரம்பக்கல்வி எதிர்நோக்குகின்றது. இவற்றை நிவர்த்தி செய்து சகல பிள்ளைகளுக்கும் ஆரம்பக்கல்வியைப் பெற்றுக்கொடுப்பது நம் அனைவரினதும் கடமையுமாகும்.
உலகின் தலைசிறந்த கல்வியைப் போதிக்கும் பின்லாந்தில், 07 வயதில் பாடசாலைக்குச் சேரும் பிள்ளை முதல் 3ஆண்டுகளும் சிறிது நேரக்கற்றலிலும், ஏனைய நேரங்கள் விளையாட்டுக்கள், ஜிம் போன்ற வற்றிலேயே கழிக்கும். 13 வயது வரை எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளாத பின்லாந்துப் பிள்ளைகள் உலகளவில் நடைபெறும் தேர்வுகளில் பங்கு கொண்டு முதலாவது இடத்தை தக்க வைக்கின்றனர், என்பதை இலங்கையர் என்ற வகையில் நாம் சிந்திக்க வேண்டிய விடயமாகும். நவீன ஆய்வுகளின்படி, பல்வேறு நாடுகளில் ஆரம்பக்கல்வி ஆனது விவசாய உற்பத்தியை 8.7% ஆல் அதிகரிக்க உதவுகின்றது என குறிப்பிடுகின்றது.
வளர்முக நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் படி உயர்கல்வி, இடை நிலைக் கல்வியின் விளைவு வீதம் 15-17% ஆகவும், ஆரம்பக் கல்வியின் விளைவு வீதம் 27% ஆகவும் காணப்படுவதால் பிற கல்வி நிலைகளை விட ஆரம்பக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. தனியாளும், சமூகமும் கல்வியினால் அடைந்த நன்மைகளைத் தொகை ரீதியாக எடுத்துக் கூறுவது கல்வியின் விளைவு வீதம் ஆகும். 'இளமையிற் கல்வி சிலையில் சிலையில் எழுத்து' என்பதற்கு இணங்க ஆரம்பக் கல்வியின் அத்திவாரம் முறையாக இடப்பட்டால் மாத்திரமே பிள்ளையின் சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுத்திட முடியும் என்பதை மனதிற்கொண்டு பிள்ளையின் உடல்,உள வயதிற்கு ஏற்றாற் போல் ஆரம்பக்கல்வி வழங்கப்படுதல் வேண்டும்.
Post a Comment