உளவியல் என்பது மனித நடத்தைக்கோலத்தை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்யும் ஒரு துறையாகக் காணப்படுகிறது, இவ்வகையில் இத்துறையின் கவனக்குவிப்பு வலையங்களில் ஒன்றாக சிறுவர் உளவியல் காணப்படுகின்றது.
முன்பள்ளி ச்சிறுவர்களின் உளவியல் (3-5வயது)
சிறுவர் உளவியல் பொதுவாக முன்பள்ளிச் சிறுவர்கள், அதாவது ஐந்து வயதிற்குட்பட்டவர்கள் தற்பெருமை நிலைக்கு (ego centric) உட்பட்டு இருப்பார்கள். நேரடித்தன்மை குறைந்ததும் ‘தான்’ என்ற கர்வமும் அதேசமயம் மிகவும் மென்மையானதும், சாதுரியமானதும் (subtlel) குழந்தைத் தனம் கொண்ட உடனடியாக கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகள் பலவற்றைக் கொண்டும், இந்த முன் பள்ளிக் காலங்களில் சிறுவர்கள் காணப்படுகின்றனர். இவ்வகையான இயல்பு பெற்றோர்களுக்கும், அதே சமயம், முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கூடப் புரிந்து கொள்ள கடினமானதாக
உள்ளதோடு, எவ்வாறு அவர்களின் தேவைகளை அவர்களின் மனம் குன்றாதபடி தீர்த்து வைத்தல் என்பதும் இடர்பாடுடைய ஒன்றாகக் காணப்படுகின்றது. விளையாடுவதில் ஏற்படும் மாறுபட்ட அபிப்பிராயங்கள், கீழே விழுதல், காயங்கள் போன்றவற்றால் ஏற்படும் அழுகை, பிடிவாதம் என்பன கட்டுப்படுத்தப்பட்டாலும் அதன் எதிர்விளைவானது தீங்கு செய்தல், இடையூறு செய்தல் போன்ற எதிர் நடவடிக்கைகளுக்கு அவர்களை இட்டுச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
இவை சிறுவர்களிடம் உடல் ரீதியான அசௌகரியம் முதலான பல சிக்கல்களை உண்டாக்குகின்றன. ஆனால் இவற்றில் இருந்து சிறுவர்கள் விடுபடும் போது தமது சக்தியை வேறு பல திறன்களை விருத்தி செய்தலில் செலவிட முடியும். நகையுணர்வு அல்லது சந்தோசமான நிலையானது முன்பள்ளிச் சிறுவர்களிடம் விளையாடுதல், வேறு பிடித்தமான உடற் செயற்பாடுகள், உடல் உணர்வுகளைத் தூண்டும் செயல்கள், மற்றவர்களை மட்டந்தட்டி பேசுதல், மற்றும் “தான்” என்ற கர்வம் கொண்ட நிலைகளிலிருந்து வெளிப்படுகின்றது.
இப்பருவத்தினர் அடிப்படை தற்பாதுகாப்புப் பற்றிய உணர்ச்சிகளின் முதிர்ச்சியின்றி, பெரிதும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கின்ற தன்மை உடையவர்கள். அத்துடன், அன்பு மற்றும் தம்மை ஏற்றுக்கொள்ளும் தன்மை (love and acceptance) என்பனவற்றை மற்றவர்களிடம் எதிர்பார்ப்ப வர்களாக இருப்பர். இவ்வியல்பு முதலில் வீடுகளிலும் பின்னர் முன் பள்ளிகளிலும், அதன் தொடர்சியாகப் பாடசாலையின் ஏனைய பருவங்களி லும் தொடர்கின்றது. சிறுவர்கள் குடும்பத்திலும், பாடசாலை மற்றும் விளையாட்டுக் குழுக்களிலும் தம் மீதான அன்பையும், தம்மை ஏற்றுக் கொள்ளும் தன்மையினையும் எப்போதும் நிச்சயப்படுத்திக் கொள்ள முற்படுவர்.
இவற்றின் தொடர்ச்சியாக உணர்ச்சிகளின் நல்லுருவாக்கமானது, அதாவது உல்லாசம், மகிழ்ச்சி, அமைதி என்பவற்றைப் பெற்றோர்களும்,ஆசிரியர்களும் அதற்குரிய சூழ்நிலையை உருவாக்குவதனூடாகச் சிறுவர்களிடம் இவ் உணர்வுகள் வளர்ச்சியடைய வழி செய்தல் வேண்டும். விளையாடும் நேரங்களில் ஆசிரியரும் மகிழ்ந்து அதனைக் அனுபவிக்கும் போதுதான் அதனை ஒவ்வொரு சிறுவர்களும் முழுமையாக ஏற்றுக் கழிக்கின்றனர். இவ்வாறான சூழல் சிறுவர்களின் உணர்வு வளர்ச்சிக்கு உதவுவதோடு, அதனைத் தகுந்த ஒரு நிலைக்கும் கொண்டு செல்கின்றது.
மேலே ஏறுவதில் சில சிறுவர்களுக்கு அச்சம் அல்லது பயம் காணப்படின் அவர்களை கட்டாயப்படுத்தவோ, நிர்பந்திக்கவோ கூடாது. அதற்கு ஈடாக நிலமட்டத்திற்கு அருகாமையாக உள்ள வேறு ஏறுதல் பயிற்சிகளை அவர்களுக்குக் கொடுக்கலாம். வித்தைகள் காட்டக்கூடிய அசாதாரண செயல்கள் என்பது தேவையில்லை ஆனாலும் சிறுவர்கள் புதிய திறன்களை தெரிந்து கொள்ளக்கூடிய வகையிலும், அதனை நுணுக்கமாக ஆராய்ந்து உற்சாகம் பெறத்தக்க முறையிலும் அதேசமயம் ஒவ்வொரு சிறுவர்களும் தமது சொந்தத் திறன் விருத்திக்கேற்ப எடுத்துக் கொள்ள இலகுவான வகையிலும் அப்பயிற்சிகள் அமைதல் வேண்டும்.
சில சிறுவர்கள் அவலட்சணமான செயல்களுடன் இருந்தாலும் ஆசிரியர்கள் ஆதரவாக அவர்களிடம் பேசி அந்தப் பிழைகளை எடுத்துக் கூறுதல் வேண்டும். அது மேற்படி சிறுவர்கள் தமது திறனில் மென்மேலும் வளர்வதற்கும் அதற்குரிய மன உறுதியைப் பெறவும் உதவும். இதனாற் சிறுவர்கள் பயத்திலிருந்து விடுபட்டு ஆசிரியருடன் நெருங்கி உறவாட முடிகின்றது. அத்துடன் தன்னால் குறித்த திறனை செய்யமுடியவில்லை என்ற ஏமாற்றம், தாழ்வு மனப்பான்மை என்பனவற்றிலிருந்து அவர்கள் விடுபடவும். உதவுகின்றது. பொதுவாக முன்பள்ளிச் சிறுவர்கள் ஆசிரியரிடம் சௌகரியமான ஒரு உறவினை நாடிச்செல்வர். ஆனால் ஆசிரியர்கள் தமது விளையாட்டுகளில் ஆதரவாக இல்லாமல் இருந்தால் ஒரு இறுக்கமான நெருக்கமற்ற உறவையே அவர்களுடன் வைத்துக்கொள்வர்.
எவ்வாறாயினும் சிறுவர்கள் குறிப்பிட்ட விளையாட்டுத் திறன்களில் பழக்கப்படும் வரை ஆசிரியர்கள் உதவியாளராகவும், ஒரு நண்பனாகவும் இருக்கவேண்டும். சிறுவர்கள் சாதாரணமாக விளையாட்டுகளில் ஈடுபடும்போது சந்தோஷமாகவும் உல்லாசமாகவும் இருப்பர். சத்தம் போட்டு நீச்சென கத்தி விளையாட்டில் ஏற்படும் பயத்தினையும், தமக்குள் இருக்கும் மன இறுக்கத்தினையும் வெளியேற்றுகின்றனர். இதனால் அவர்கள் தமது விளையாட்டுத் திறனில் முன்னேற்றமடைவதுடன் சாதகமானதும் பாதுகாப்பானதுமான திறன் அபிவிருத்திக்கு அது இட்டுச் செல்கின்றது. முன்பள்ளிச் சிறுவர்கள் மெதுவாகவும், சுதந்திரமாகவும் தமது திறன்களை வளர்த்துக்கொள்ளும் செயற்பாட்டின் ஊடாக உகந்த சிறந்த ஆற்றுகையை எவ்விதம் தற்பாதுகாப்புடன் செய்யமுடியும் என்பதைத் தாமே கண்டுபிடித்துக் கொள்வர் என்பதனை ஆசிரியரும் பெற்றோரும் மனதிற் கொள்ள வேண்டும்.
ஆரம்பப்பள்ளிச் சிறுவர்களின் உளவியல் (6-8வயது)
ஆரம்பப் பள்ளிச் சிறுவர்களிடமும் பாதுகாப்பிற்கும், தம்மை ஏற்றுக் கொள்வதற்குமான சாதாரண உணர்ச்சியானது முன்பள்ளியின் தொடர்ச்சியாகவே காணப்படுவதுடன், தமது வயதை ஒத்தவர்கள் தம்மை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்பதிலும் முக்கியகவனம் செலுத்துவர். அதேசமயம் தமது வயதிற்கு மேற்பட்ட இளைஞர் பருவத்தில் இருப்பவர்கள் தம்மை ஏற்றுக் கொள்வார்களா என்ற ஏக்கத்துடனும், எதிர் பார்ப்புடனும் இருப்பார்கள். அதாவது சமூகத்தில் கிடைக்கும் அனுமதி மற்றும் தானாகவே எல்லாவற்றையும் கட்டுப்படுத்திப் பெறவேண்டும் என்ற மனப்பாங்கோடு அவர்கள் காணப்படுவர். சில சிறுவர்கள் இளைஞர்களிடம் தம்மை அர்ப்பணித்து, எல்லாவற்றிற்கும் அவர்களையே சார்ந்தும் காணப்படுவர். எவ்வாறு இருந்தாலும் புதியவற்றை தமது வயதினரின் அங்கீகாரத்துடனேயே பெற்றுக் கொள்வர். இக்காலகட்டத்தில் பலதரப்பட்ட செயற்பாட்டுகளை மிகவும் விரிவுபடுத்திச் செய்வதில் சிறுவர்கள் மிகவும் ஈடுபாடுடையவராக இருப்பர்.
உணர்ச்சி அனுபவங்களில் நல்லதொரு விஸ்தீரணத்தினை இச் சிறுவர்கள் தமக்குள் எடுத்துக் கொள்வர். இப்பருவத்தில் முன் பள்ளிப் பருவத்தினை விடவும் உணர்ச்சிகளை கூடியளவு கட்டுப்படுத்தக்கூடியர்களாகச் சிறுவர்கள் காணப்படுவர், ஆகையால், ஒப்பீட்டளவில் உணர்ச்சிகளை இலேசாகக் களைந்துவிட்டு, எளிதில் எல்லாவற்றையும் புரிந்து கொள்பவராகக் காணப்படுவர். அழுகை, உடல் ரீதியாக ஏற்படும் காயங்கள், களைப்படைதல் போன்ற செயல்களை கட்டுப்படுத்த எத்தனிப்பர். ஆறு ஏழு வயதினரிடையில் சமூகச் சூழ்நிலை சார்ந்து ஏற்படும் கோபமானது விளையாடும் சந்தர்ப்பங்களில் தெளிவாக காணப்படும்.
சில சிறுவர்களிடம் கோபமானது, சண்டை போடும் அளவிற்கு விரிவுப்படுகின்றது. அனாவசிய உரையாடல், முரட்டுச் சுபாவம், பொறாமைப்படுதல், நடிக்கும் இயல்பு போன்ற செயற்பாடுகளினால் தமது உடல் சார்ந்து எல்லோரையும் ஆக்கிரமிக்க முயற்சிப்பர். அதேசமயம், இந்த ஆரம்பப்பள்ளிச் சிறுவர்கள், கஷ்டமான சூழ்நிலைகளில் தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக இளைஞர் பருவத்திற்குரிய உடைகளிலும், ஆயுதம் தாங்கி கொடுந்தொழில் புரிபவர்போலவும் பாவனை செய்து கொள்வர். இதேவேளை,சிறுவர்கள் பயப்பிடுவதனால் திறன், துணிவு என்பவற்றில் அபிவிருத்தியடைய முடியாதிருக்கும். அதாவது ஆரம்பப்பள்ளி அனுபவங்கள் தோல்வியுடையதாகவும், புகழ் அற்றதாகவும் அவர்களுக்குக் காணப்படும். இது அவர்களது பிற்பட்ட கால வாழ்க்கையையும் பாதித்துவிட முடியும். இவ்விடயத்தில் பெற்றோரும், ஆசிரியரும் கவனத்துடன் செயற்பட வேண்டும். இந்த பருவம் முடிவடையும் காலத்தில் சிறுவர்கள் கேலிப்பேச்சு, பகிடிகளினால் தமது வயதினரிடம் உறவாடி தமது சந்தோஷங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டுவர்.
ஆறுவயது கொண்ட சிறுவர்கள் முன்பள்ளியிலிருந்து ஆரம்பப் பள்ளிக்கு – அதாவது முதலாம் ஆண்டிற்குச் செல்வர். முறைசார்ந்த முன்பள்ளி அனுபவமானது சுதந்திரமான, இலேசான ஒரு வீட்டிற்குரிய அனுபவமாகவே அடிப்படையில் காணப்படுகின்றமையினால், “வீட்டை விட்டு போதல்” என்ற உணர்ச்சியின் விளிம்பில் சிறுவர்கள் பலவிதமான உணர்ச்சிச் சிக்கல்களை எதிர்நோக்குவர்- பழைய சூழலையே எதிர்பார்ப்பர். இந்த வகையில், ஆரம்ப்பள்ளிகளில் அதாவது ஆசிரியரிடமும், விளையாட்டு குழுவினரிடமும் தம்மை ஏற்றுக்கொள்ளல் என்பதனை முதல்நிலைப்படுத்துவர். ஆசிரியர்கள், விளையாட்டுக் குழுக்களுக்கிடையில் ஒவ்வொரு சிறுவர்களுக்குமான இடத்தை உறுதிசெய்து, அக்குழுவிற்குள் ஒத்திசைவை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பது இச்சிறுவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இக்காலத்தில் சந்தோஷமும் பாதுகாப்புமுடைய, போட்டிகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்குதல் மிகவும் அவசியமானது. இயல்பான அசைவுடன் கூடிய விளையாட்டுகள் இக்காலகட்டத்தில் முக்கியமாகிறது.
ஆரம்பப்பள்ளியில் மெதுவாகக் கற்றுக்கொள்ளும் சிறுவர்களும் காணப்படுவர். அவர்கள் உணர்ச்சி நிலைகளில் பல கஷ்டங்களை எதிர் நோக்குவர். இதனால் அவர்கள் தமது வயதை ஒத்தவர்கள் தம்மைத் தமது விளையாட்டுக் குழுக்களில் சேர்க்காமல் போய்விடுவார்களோ என்ற ஏக்கத்துடன் காணப்படுவர். அந்தச் சமயத்தில் ஆசிரியர் அவர்களுடன் மிகவும் பக்குவமாக நடந்து, அவர்களின் திறன் அளவிற்கேற்ப சிறப்பான கவனம் எடுத்து, அவர்களின் பாதுகாப்பிற்கும் ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். அதே சமயம் ஆசிரியர் அச்சிறுவர்களை கையாளும் விதத்தில் அவர்களுக்குரிய மரியாதையிலும், சுதந்திரத்திலும் முழுக்கவனமும் எடுத்து அவர்களை அபிவிருத்தி செய்தல் வேண்டும். இவ்வாறு அவர்களின் திறன்விருத்தி அபிவிருத்தி அடையும் போது மெதுவாகப் பயின்ற சிறுவர்கள் ஆசிரியர்களை விட்டு தமது வயது குழுவினருடன் சேர்ந்து சகல திறன் நடவடிக்கையிலும் பங்கு கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
இடை நிலைப்பள்ளிச் சிறுவர் உளவியல் (9-11 வயது)
இந்த இடைநிலைப் பள்ளிப்பருவத்தில் சிறுவர்கள் தமது மனக்கிளர்ச்சிகளைப் பகிர்வதற்கும் – பாதுகாப்பதற்கும் தமது வயதினரை முக்கியமாக ஏற்றுக்கொள்வர். அதேநேரம் வரப்போகும் தமது இளைஞர் பருத்தின் சுதந்திரத்தினையும் பாதுகாத்துக் கொள்வர். எவ்வாறாயினும் இளைஞர் போல பாவனை செய்து கொண்டு இருப்பதனையே இப்பருவத்தில் அதிகம் விரும்புவர். குடும்பத்தினை விட்டு வெளியில் தனியாக நம்பிக்கையுடன் நடமாடுதல் மற்றும் ஒரு தலைவன் அல்லது கதாநாயகனுக்குரிய ஒரு நிலையை அவர்களிடம் உருவாகும் பருவமாக இது காணப்படுகின்றது.
இந்த இடைநிலைப் பள்ளிப் பருவத்தில் உணர்வுகளை மறைமுகமாக கட்டுப்படுத்த பழகிக்கொள்ளுவர். மற்றவர்களைவிட எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு அனுகூலமான செயற்பாடுகளுடன் இருப்பர். மாறுபட்ட அபிப்பிராயங்களை நீக்கி முடிவு எடுப்பது. எல்லோருடன் ஒத்துப் போதல், முயற்சி செய்து புதிய ஆக்கச் செயற்பாட்டுடன் சாதிப்பது போன்ற நடவடிக்கையுடன் இருப்பர். எவ்வாறாயினும் தமக்குப் பலனளிக்கும் ஈடு செய்யக்கூடிய முறைகளை கையாளுவர். இதேசமயம் பகல்கனவு, சுறுசுறுப்பின்மை வீண்பேச்சு, தீங்குசெய்தல் விரோதமான மனப்பான்மை, தீர்க்கமுடியாத மாறுபட்ட அபிப்பிராயம் போன்றவற்றோடும் இவ்விடைநிலை பள்ளிப் பருவத்துச் சிறுவர்கள் காணப்படுவர். ஆனால் இவ்வாறான இயல்புகளை எளிதில் வெளிக்காட்டாதிருக்க முயற்சிப்பர். இவ்விடைநிலைப் பள்ளிப் பருவத்தில் கோபமானது கூடியளவில் தூண்டப்படும். இதனால் இளைஞர்களுடன் எதிர்ப்புத்தன்மை, பல வினாக்களை வினாவும் தன்மை என்பனவும் ஏற்படும்,
மேலும் சிறுவர்கள் ஆரம்பகாலத்தில் மற்றவர்களுடன் ஆழ்ந்த உணர்வுகளுடன் கூடிய வாழ்க்கையுடன் இருப்பர். இந்த ஆழ்ந்த தன்மையானது விளையாட்டு வீரனின் நற்பண்பு நடவடிக்கைக்கு ஒரு அடிப்படையான முன்மாதிரியாகவும் இருக்கும். இப்பருவத்தில் ஆண் பெண் என்ற பால் ரீதியில் கலந்து விளையாட்டுச் செயற்பாட்டில் ஈடுடபடுவர். அவ்வாறு ஈடுபடும்போது இரு பிரிவினருக்கும் இடையில் போட்டி எதிர்ப்பு மனப்பான்மை, எதிரிடைப்பால் கவர்ச்சி என்பன மறைமுகமாக ஏற்படும்.
இப் பருவத்தில் பாடசாலை வேலைகளின் சாதாரண கல்விப் பளுவினால் சிறுவர்களின் புதிய ஆக்க செயற்பாடுகள் (creative ability) குறைவடையும் வாய்ப்பு நமது கல்வித்திட்டம், அதனை நடைமுறைப்படுத்தல் என்பவற்றினால் ஏற்படும். ஆனால் திறன் கூடிய சிறுவர்கள் இரண்டையும் சம அளவாக பேணிப் பாதுகாப்பர். மேலும் ஆரோக்கியம் பற்றியும் ஓரளவு சிந்திக்கின்ற, பாடசாலைக் கல்வியின் ‘வெற்றி’ பற்றியும் பயம் ஏற்படும் ஏற்படுத்தப்படும் பருவம் ஆகும். இக்காலத்தில் இனம், சமயம், திறன் போன்றவற்றின் வேறுபாடுகளை இனங்கண்டு கொள்வர். மேலும் மனிதனின் அடிப்படைகளையும் விருப்பு வெறுப்புகளையும் இனங்கண்டு கொள்ளும் பருவமாகும். இவ்வாறாக இந்த முன்பள்ளி, ஆரம்பபள்ளி, இடைநிலப் பள்ளி பருவங்களில் சிறுவர்களின் உளவியலானது தம்மை சமூகத்தில் பிரதிநிதித்துவபடுத்துவதில் வெவ்வேறு மட்டத்தில் ஆனால் முழுக்கவனத்துடன் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
Post a Comment